குடியரசு தின முகாமிற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள் புதுடெல்லிக்கு வருகை தருகிறார்கள். அணிவகுப்பில் ஈடுபட்டு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள், சாகச விளையாட்டுகள், இசை, நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் தங்களின் திறமைகளைப் பிரதமர் முன்னிலையில் வெளிப்படுத்துவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய மாணவர் படை அணிவகுப்பு புதுடெல்லியின் கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பல்வேறு என்சிசி படைப்பிரிவுகளின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். என்சிசி படைப்பிரிவினரில் சிறந்து விளங்கியோருக்கு விருதுகள் வழங்கிய பிரதமர், பின்னர் அவர்களிடையே உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ரஷியா, பூடான் மற்றும் நேபாளம் நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் பங்கேற்று அணிவகுப்பு மற்றும் சாகசங்களில் ஈடுபட்டனர்.
சென்ற ஆண்டு என்சிசி அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இயற்கைச் சீற்றங்களின் போது, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முன்முயற்சிகளிலும் அவர்களின் செயல்களைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது